சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   ஆண்டாள்  
நாச்சியார் திருமொழி  

Songs from 504.0 to 646.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    Previous   1  2  3  4  5    6  7  8  Next
சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த
      தண் முகில்காள் மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
      நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல்
      உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என்
      நடலை-நோய் செப்புமினே



[582.0]
சங்க மா கடல் கடைந்தான்
      தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ்
      அடி-வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின்
      குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
      தங்கும் என்று உரையீரே



[583.0]
கார் காலத்து எழுகின்ற
      கார்முகில்காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப்
      பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம்
      பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம்
      வாசகம் தந்தருளாரே             



[584.0]
மத யானை போல் எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
      பாம்பு-அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான்
      கருதாது ஓர் பெண்-கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
      வையகத்தார் மதியாரே?



[585.0]
Back to Top
நாகத்தின் அணையானை
      நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக்கோன்
      விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத
      புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார்
      அவர் அடியார் ஆகுவரே



[586.0]
சிந்துரச் செம்பொடிப் போல்
      திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
      எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
      மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
      சுழலையினின்று உய்துங் கொலோ?



[587.0]
போர்க்களிறு பொரும்
      மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
      தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று
      கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ
      அவன் தார் செய்த பூசலையே



[588.0]
கருவிளை ஒண்மலர்காள்
      காயா மலர்காள் திருமால்
உரு-ஒளி காட்டுகின்றீர்
      எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள்
      திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இற் புகுந்து
      வந்திபற்றும் வழக்கு உளதே?



[589.0]
பைம்பொழில் வாழ் குயில்காள்
      மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள்
      வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள்
      அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய
      நிறம் உங்களுக்கு என் செய்வதே?



[590.0]
Back to Top
துங்க மலர்ப் பொழில் சூழ்
      திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
      திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
      தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
      எனக்கு ஓர் சரண் சாற்றுமினே



[591.0]
நாறு நறும் பொழில்
      மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
      வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
      அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
      இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?



[592.0]
இன்று வந்து இத்தனையும்
      அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
      கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
      திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
      மனத்தே வந்து நேர்படிலே



[593.0]
காலை எழுந்திருந்து
      கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
      மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
      துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
      அவன் வார்த்தை உரைக்கின்றதே



[594.0]
கோங்கு அலரும் பொழில்
      மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு
      உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
      மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண்-ஒலியும்
      தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ?



[595.0]
Back to Top
சந்தொடு காரகிலும்
      சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
      உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
      குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
      திருமாலடி சேர்வர்களே             



[596.0]
கார்க்கோடற் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான்?
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த்
தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ



[597.0]
மேல்-தோன்றிப் பூக்காள் மேல்-உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே?



[598.0]
கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர்தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பு-அணையார்க்கும் தம் பாம்புபோல்
நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே



[599.0]
முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே?



[600.0]
Back to Top
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்? நல் வேங்கட-
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே



[601.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song